Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய அரசமைப்புக்கு எதிரான கோட்டாவின் வியூகத்தை முறியடிக்க முப்படையினரையும் நாடுகின்றது அரசு!

புதிய அரசமைப்புக்கு எதிரான கோட்டாவின் வியூகத்தை முறியடிக்க முப்படையினரையும் நாடுகின்றது அரசு!

புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையானது நாட்டைக் கூறுபோடுவதற்கான ஆரம்பகட்டம் என்றும், அது படையினருக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூட்டு எதிரணியால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரப்போரை முறியடிக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன் ஆரம்பகட்ட வியூகமாக அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பில் முப்படையினருக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் சட்டப்பணியகத்தின் உதவியுடனும், சட்டவல்லுநர்களின் பங்களிப்போடும் முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக அண்மையில் இராணுவத்தின் ஒரு பிரிவினருக்கு கருத்தரங்கொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம்கட்ட நிகழ்வு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது. இதன்போது கடற்படை, விமானப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்குப் புதிய அரசமைப்பு சம்பந்தமாக தெளிவுபடுத்தப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

புதிய அரசமைப்பை உருவாக்கும் நோக்கில் அரசமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அதற்கு எதிரான பிரசாரத்தை மஹிந்த தலைமையிலான பொது எதிரணியும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் ஆரம்பித்துள்ளன.

அத்துடன், ‘எலிய’ (வெளிச்சம்) எனும் அமைப்பொன்றை உருவாக்கி அதன் ஊடாக புதிய அரசமைப்புக்கு எதிரான போரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் ஆரம்பித்துள்ளார்.

புதிய அரசமைப்பு நாட்டைக் கூறுபோடும் என்றும், படையினரை பலிகடாக்களாக்குவதற்கு அது வழிசமைத்துக் கொடுத்துவிடும் என்றும் சிங்கள மக்கள் மற்றும் படையினர் மத்தியில் அச்சத்தை உருவாக்கும் வகையில் கூட்டு எதிரணியின் பிரசாரம் அமைவதால் அது அரசுக்கு சிங்கள மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால் அது சிக்கலாக அமைந்துவிடுமென்பதாலேயே புதிய அரசமைப்பு எதற்காக கொண்டுவரப்படுகின்றது, அதன் நோக்கம் என்ன என்று படையினருக்கு விளக்கமளிக்கப்பட்டுவருகின்றது.

அதேவேளை, பௌத்த பிக்குகளுக்கும் தெளிவுபடுத்தப்படவுள்ளது. இதற்கான பொறுப்பு பௌத்தசாசன அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv