Saturday , October 18 2025
Home / முக்கிய செய்திகள் / நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு!

நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு!

இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நாளை விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் முதன்முறையாக 1947 ஒக்ரோபர் 14ஆம் திகதி சபாநாயகர் அல்பிரெட் பிரான்சிஸ் மொலமூர் அல்பேர்ட் பீரிஸ் தலைமையில் கூட்டப்பட்டிருந்தது.

1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 20ஆம் திகதிவரையான 19 நாட்கள் நடந்த பொதுத் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றனர்.

நான்கு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் செயற்பட்ட முதல் நாடாளுமன்றம், 1952 ஏப்ரல் 8ஆம் திகதி கலைக்கப்பட்டிருந்தது.

முதல் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வை இலங்கையின் அப்போதைய ஆளுநர் சேர் ஹென்றி மொனேக் மாசன் மூர் ஆரம்பித்துவைத்திருந்தார்.

முதல் நாடாளுமன்றத்தின் 95 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, பொல்ஸ்விக் லெனினிஸக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், இலங்கை இந்திய காங்கிரஸ், ஐக்கிய இலங்கை காங்கிரஸ், சுவராஜ் கட்சி மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

பதிவுசெய்யப்பட்ட 7,51,432 மொத்த வாக்காளர்களில் 39.81 வீத வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சி 42 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான டி.எஸ்.சேனநாயக்க, முதல் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டின் முதலாவது பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவராக என்.எம்.பெரேரா பணியாற்றினார்.

இந்நிலையில், நாளை நாடாளுமன்றம் கூட்டப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளன. இதன் நிமித்தம் விசேட அமர்வு நாளை பிற்பகல் 2.30 மணிக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இதற்காக நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், விசேட பாதை ஒழுங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நாளை நாடாளுமன்றத்தை பார்வையிட பொதுமக்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv