கடந்த மாதம் லண்டன் சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காலை பாகிஸ்தான் திரும்பினார்
பனாமா கேட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நவாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைஏற்று விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் படி நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டது.
இதையடுத்து, ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கி உள்ள நவாஸ் செரீப் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பான பொறுப்புடைமை நீதிமன்றம் முடக்கியது. இது நவாஸ் ஷெரீப்புக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் மனைவி கல்சூம் ஷெரீப், சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கல்சூம் ஷெரீப்பை உடனிருந்து கவனித்துக்கொள்ள நவாஸ் ஷெரீப் கடந்த மாதம் லண்டன் சென்றார். இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் இன்று காலை இஸ்லமாபாத் திரும்பினார். முன்னதாக லண்டனில் இருந்து திரும்பும் முன், தனது சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியுமான ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தனது கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காலை 7.30 மணிக்கு நவஸ் ஷெரீப் வந்த விமானம் இஸ்லமாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. நவாஸ் ஷெரீப்பை அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். நவாஸ் ஷெரீப், தனது பஞ்சாப் இல்லத்தில் தங்குவார் எனவும், நாளை கட்சியின் முக்கிய தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாளை தேசிய பொறுப்புடமை முன் நவாஸ் ஷெரீப் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்களுக்கு எதிராக மூன்று வழக்குகளை தேசிய பொறுப்புடமை அமைப்பு பதிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.