வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதும் பரிசீலனையில் உள்ளது. பெரும்பாலும் போரை தவிர்க்கவே விரும்புகிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்டனில் நேற்று முன்தினம் கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த நாடு தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த நாட்டை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இதற்கு பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ராணுவ நடவடிக்கை திட்டமும் பரிசீலனையில் உள்ளது. எனினும் என்னை பொறுத்தவரை போரை தவிர்க்கவே விரும்புகிறேன். அமெரிக்க ராணுவம் மிகவும் வலிமையானது. ஒருவேளை போர் மூண்டால் அது வடகொரியாவுக்கு மிகவும் துயரமான நாளாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளது. அந்த நாட்டை தனிமைப்படுத்த வேண்டும். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சீனா மறைமுக ஆதரவு
வடகொரியாவின் 90 சதவீத வர்த்தகம் சீனாவை சார்ந்துள்ளது. ஐ.நா. சபையின் பொருளாதார தடைகளை சீனா முழுமையாக அமல்படுத்தினால் மட்டுமே வடகொரியாவை தனிமைப்படுத்த முடியும். ஆனால் வடகொரியா விவகாரத்தில் சீனா இரட்டை வேடம் போடுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
வடகொரியாவுக்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகிறது. அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்கக்கூடாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=lsUG5_DuWTQ