மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக இரண்டு சட்டமூலங்களைத் திருத்துவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேர்தல் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியிருக்கும் மேலதிக கருத்துகள் வருமாறு:-
“நாடாளுமன்றம் எடுக்கும் தீர்மானத்துக்குக் கட்டுப்படவேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையகத்துக்கு உள்ளது. எனினும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு விரோதமாக தேர்தல்களை ஒத்திவைப்பதற்காக ஓரிரு சட்டமூலங்களைத் திருத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்கவேண்டிய தலையாய பொறுப்பு நாடாளுமன்றத்துக்கு உள்ளது. தனது இஷ்டத்துக்கு தேர்தல்களைத் தள்ளிப்போடுவதன் மூலம் அரசு ஜனநாயகத்தை மட்டுமன்றி பொதுமக்களின் அடிப்படை உரிமைகளையும் மீறி வருகிறது.
தேர்தலொன்றின் மூலம் தங்களுக்குத் தேவையான அரசொன்றைத் தெரிவுசெய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பல்வேறு காரணங்களைக் காட்டி நீண்டகாலமாக இழுத்தடித்துவரும் அரசு இப்போது மாகாண சபைத் தேர்தலிலும் கைவைக்கப்பார்க்கின்றது. இது பொதுமக்களின் உரிமைகளை மட்டுமன்றி தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகளினது உரிமைகளையும் பாதிக்கின்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.