அம்பாறையில் 5 தமிழர்களை சுட்டுக் கொலைசெய்த சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு அம்பாறை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரும் அம்பாறை மேல்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சுமுது பிரேமச்சந்திர மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பணிபுரிந்த முன்னாள் கான்ஸ்டபிள்களான ஆர்.பி.காமினி குமாரசிங்க மற்றும் ஜே.எம்.நிமல் குணரத்ன ஆகிய இருவருக்குமே மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும், இந்தச் சம்பவத்தின் மற்றொரு சந்தேகநபரான ஏ.டபிள்யூ.வசந்தகுமார எனும் கான்ஸ்டபிள் வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் மரணமடைந்துவிட்டார் எனவும் தெரியவருகின்றது.
1997ஆம் ஆண்டு செப்டெம்பர் 23ஆம் திகதியன்று அம்பாறை, மத்திய முகாம், நான்காம் கொலனியில் வசித்த பொன்னையா சதாசிவம், கணபதிப்பிள்ளை குமாரசாமி, வேலுப்பிள்ளை பாக்கியராஜா, வெல்லக்குட்டி சுந்தரலிங்கம் மற்றும் குமாரசாமி ரங்கநாயகம் ஆகிய 5 பேரையும் ரி – 56 ரகத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அம்பாறை மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.