Saturday , November 16 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்

அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்

அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள்

 

இன்று அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன் வசிய குரலால்… கவரும் எழுத்தால் எண்ணற்ற தம்பிகளை உருவாக்கி தமிழகத்தை ஆண்டவர் அண்ணன் அறிஞர் அண்ணா. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும் இதனை தன் வாழ்நாளில் கடைசி வரை கடைபிடித்தார்.

அண்ணா. சி.என்.ஏ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணாதான் தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் “தளபதி”. பெரியாரின் சீடராக வலம் வந்த போது அப்படிதான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் அண்ணாதான். பெரியாரின் சீடராக, பெரியாரின் தளபதியாக இருந்த அண்ணா ஒரு கட்டத்தில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விட்டு பிரிந்து “திராவிட முனேற்ற கழகம்” என்ற தனி கட்சி கண்டார். இருந்த போதிலும் பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார்.

தனிக்குரலோன் அண்ணா மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் கரகரத்த தனிக்குரல் வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றளும் பெற்றவர்.

அடுக்கு மொழி அண்ணா தொடர்ந்து மணிக்கணக்கில் பொது கூட்டங்களில் பேசக்கூடியவர்.அதுவும் அடுக்கு மொழியில் பேசுவதில் அவரை மிஞ்ச தமிழகத்தில் ஆள் கிடையாது. அப்படிப்பட்ட அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு. அது தேர்தல் நேரம். அவர் பேசியது “மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, உதயசூரியனுக்கு இடுவீர் முத்திரை”……என்பதே அந்தப் பேச்சு.

சொற்போர் அறிஞர் அண்ணா அவர்கள் 1962 லிருந்து 1967 வரை ராஜ்ய சபா உறுப்பினராக பதவி வகித்தார். 1962 இல் அண்ணா மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டசபையில் இடம்பெற்றிருந்த பொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட குற்றசாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றசாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டுக்கு அண்ணா அருமையாக பதில் கூறினார்.

வியக்க வைத்த பதில் “நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

சுயமரியாதை திருமணச் சட்டம் 1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னையும்,கழகத்தையும் அதில் தீவிரமாக ஈடு படுத்தி கொண்டதால் தமிழக மக்களின் பேராதரவு அவருக்கும், தி.மு.க விற்கும் கிடைத்தது. 1967ல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற தி.மு.கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தார் அண்ணா. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார்.

தமிழ்நாடு பெயர் அண்ணா தலை சீவமாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார் மோதிரமும், கைகடிகாரமும் அணிவது கிடையாது. என்னை காலண்டர் பார்க்க வைத்து, கடிகாரம் பார்க்க வைத்து சூழ்நிலை கைதியாக்கிவிட்டதே இந்த முதல்வர் பதவி என்று அடிக்கடி சொல்லி கொள்வார். மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

அடி அளந்து.. அண்ணா அவர்கள் சாதுர்யமாக பேசுவதில் வல்லவர். ஒரு முறை தமிழக சட்டசபையில் எதிர் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அண்ணாவை பார்த்து ” உங்களுடைய ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன ” என்று சொன்னதும் அண்ணா அதற்கு,” என்னுடைய ஒவ்வொரு அடியும் அளந்து வைக்கப்படுகிறது” என்று பதிலடி கொடுத்தார்.

பிரபலமான வசனங்கள் “கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு” என்ற அண்ணாவின் முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும். அதுபோன்றே ” எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மறப்போம் மன்னிப்போம், கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, எங்கிருந்தாலும் வாழ்க, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, இதுபோன்ற பிரபலமான வசனங்களும் அண்ணாவின் எழுத்தாற்றலுக்கும், பேச்சாற்றலுக்கும் மிக சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.

அதிக புத்தகம் வாங்கியவர் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வாசிக்கும் திறந்தான் ஒரு மனிதனை அறிவுடையவனாக அடையாளம் காட்டும் என்பார் அண்ணா. பழைய மூர் மார்க்கட்டில் இருந்த யுனிவர்சல், சென்னை ஹிக்கிம்பாதம்ஸ், இந்த இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கில புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கிம்பாதம்ஸ் எடுத்த கணக்கின்படி மைசூர் மகாராஜா சாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அந்தக் காலத்தில் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்கலாம்.

திரைப்படங்களை களமாக்கிய பேரறிஞர் தமிழிலும், ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.

எழுத்தாற்றல் 360 பக்கங்கள் கொண்ட ஓர் இரவு திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார். எந்த பொதுக் கூட்டத்திற்கு வந்தாலும் தாமதமாகத்தான் வருவார். முன்னால் வந்தால் அடுத்தவரை பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள், அதனால் ஊருக்கு வெளியில் நின்று அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டு கடைசியில் வருகிறேன் என்பார்.

ஆங்கில திறன் ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமைக் கொண்டவர் அண்ணா. அவரது ஆங்கிலப் பேச்சாற்றல் ஆங்கிலேரையே வியக்க வைக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டது. ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் Because என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார்.

மரணத்திலும் சாதனை வாழும் போதும் சரித்திர நாயனாக வாழ்ந்த அண்ணா தன இறப்பிலும் ஒரு சாதனையை படைத்துவிட்டார். ஆம், அண்ணாவின் இறுதி அஞ்சலியின் போது திரண்ட கூட்டம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 ம் ஆண்டு மறைந்த பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1970 ம் ஆண்டு மறைந்த எகிப்து ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் ஆகியோருக்கு கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது உலக சாதனை புத்தகமான கின்னஸ். அண்ணாவின் மனைவி பெயர் ராணி. இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. தன் அக்கா மகள் சௌந்தர்யாவின் குழந்தைகளான பரிமளம், கௌதமன், இளங்கோ, ராஜேந்திரன் ஆகியோரை தத்தெடுத்து வளர்த்தார். முதல்வராக அவர் இருந்து மறைந்த போது அவரிடம் இருந்த சொத்துக்கள் காஞ்சிபுரத்தில் ஒரு ஏக்கர் நிலம், ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு,நு ங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூ. 5000, மைலாப்பூர் இந்தியன் வங்கியில் ரூ.5000. இவை மட்டும்தான் அவர் விட்டு சென்ற சொத்துக்கள். ஆனால் எண்ணற்ற தம்பிகளை தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கி வைத்து விட்டு மறைந்தார் அண்ணா.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …