போன் வெடித்து 14 வயது சிறுமி உயிரிழப்பு
இரவில் சார்ஜ் போட்டுக்கொண்டே இயர் போன் மூலம் பாட்டுக்கேட்ட 14 வயது சிறுமி, போன் வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கஜகஸ்தான் நாட்டில் நடந்துள்ளது.
சார்ஜ் போட்டுக்கொண்டே பேசும் போதோ, அல்லது வேறுவிதமாக பயன்படுத்தும் போதோ செல்போன்கள் வெடித்த சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. சார்ஜ் போடும் போது போன் பயன்படுத்தினால், வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்று பல நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன.
கஜகஸ்தான் நாட்டின் பாஸ்தோப் பகுதியைச் சேர்ந்த அலுவா அப்ஸல்பென் என்ற 14 வயது பள்ளி மாணவி, இவர் நேற்று முன்தினம் இரவு போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்க சென்றார்.
அவர் தூங்கும் போது தனது தலையணைக்கு அருகில் சார்ஜ் போட்டுக் கொண்டே தூங்கியதால் போன் சூடாகி வெடித்துள்ளது.
இதனால், தலையனையில் தீப்பிடித்து அது அப்படியே சிறுமியின் உடல் முழுவதும் தீ பரவியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர் அறையிலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை சடலமாக கிடந்த மகளைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி போலீசாருக்கும் தகவல் சென்றது.
அந்த சிறுமியின் தலை அருகே செல்போன் இருந்தால் படுகாயம் ஏற்பட்டு, உயிர் பிரிந்துள்ளது. போன் வெடித்து சிறுமி உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
14 வயது சிறுமியின் இந்த அகால மரணம், அவரது குடும்பத்தினரை மட்டுமல்ல கிராமத்தினரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.