Thursday , November 21 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஹார்வே புயலில் சிக்கிய டெக்சாஸ் பேரழிவு மாகாணமாக டிரம்ப் அறிவிப்பு

ஹார்வே புயலில் சிக்கிய டெக்சாஸ் பேரழிவு மாகாணமாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து பிரகடனம் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில் டிரம்ப் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுகிறார்.

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தை கடந்த சில தினங்களாக ‘ஹார்வே’ புயல் அச்சுறுத்தி வந்தது. இது 4-வது வகை புயலாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு டெக்சாஸ் மாகாணத்தில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. மிகவும் வலிமையான ‘ஹார்வே’ புயல் 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவின் பிரதான பகுதியை நேற்று தாக்கியது. இந்த புயல் காரணமாக மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் பேய்க்காற்று வீசியது.

பெரிய பெரிய மரங்கள் கூட வேரோடு சாய்ந்தன. கார்பஸ் கிறிஸ்டி நகர் உள்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 2 லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

இந்தப் புயல் தாக்கிய 3 மணி நேரத்தில் அது 3-வது வகை புயலாக தரம் குறைக்கப்பட்டது. காற்றும் மணிக்கு 201 கி.மீ. வேகமாக குறைந்தது. இருப்பினும் இது உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளது. கட்டிடங்களுக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர நகரமான ராக்போர்ட்டில் மேயர் பேட்ரிக் ரியோஸ், அங்குள்ள மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேறி விடுமாறு கேட்டுக்கொண்டார். அங்கு ஒரு முதியோர் இல்லத்தில் மேற்கூரைகள் பறந்து விட்டன. அங்குள்ள மக்களை மீட்பதற்கு மீட்பு படையினர் செல்ல முடியாத நிலை உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாகாண கவர்னர் அப்பாட் கூறும்போது, “டெக்சாஸ் மாகாணம் பேரழிவை சந்திக்கிறது. 1000 தேசிய பாதுகாவலர்கள், பேரழிவு நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார். நேற்று காலை 5 மணி நிலவரப்படி தென்கிழக்கு டெக்சாஸ்சில் 10 அங்குலம் மழை பெய்துள்ளது.

பி.பி.சி. செய்தியாளர் ஒருவர், “இந்தப் புயல் மிகவும் வலிமை வாய்ந்தது. ஆபத்தானது. பயங்கரமானது. மெக்சிகோ வளைகுடா பகுதியில் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. விமானப் போக்குவரத்தும் முடங்கியது” என்றார்.

ஹூஸ்டன் நகருக்கு உள்ளேயும், வெளியேயும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற வகையில் வெள்ளக்காடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. வானிலை அதிகாரிகள் கூறும்போது, இந்த புயலின் பாதை நிச்சயமற்றதாக உள்ளது என்றனர்.

டெக்சாஸ் மாகாணத்தை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து பிரகடனம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த மாகாணத்துக்கு மத்திய நிதி உதவி கிடைக்கும். மேலும் அடுத்த சில நாட்களில் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஹார்வே புயல், டெக்சாஸ் மாகாணத்தில் தொடரவும், பலத்த மழையை தொடர்ந்து பெய்விக்கவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நாட்டின் 4-வது பெரிய எண்ணெய் உற்பத்தி நகரமான ஹூஸ்டன் நகரில் வரும் நாட்களில் 20 அங்குலம் மழை பெய்யும்.

கால்வெஸ்டன் நகரில் இருந்து 20 ஆயிரம் பயணிகளுடன் 3 கப்பல்கள் புறப்பட முடியாத நிலையில் உள்ளன. மொத்தத்தில் ‘ஹார்வே’ புயல், டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப்போட்டுள்ளது.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …