Monday , August 25 2025
Home / செய்திகள் / உலக செய்திகள் / ஹாங்காங் நகரை சூறையாடிய ஹாட்டோ புயல் – தெற்கு சீனா வெள்ளக் காடானது

ஹாங்காங் நகரை சூறையாடிய ஹாட்டோ புயல் – தெற்கு சீனா வெள்ளக் காடானது

ஹாங்காங் நகரை இன்று சுழற்றியடித்த ஹாட்டோ புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ராட்சத அலைகளின் எழுச்சியால் தெற்கு சீனா வெள்ளக்காடானது.

ஆசியாவின் பொருளாதார மையம் என அழைக்கப்படும் ஹாங்காங் நகரை இன்று பத்தாம் எச்சரிக்கை எண் கொண்ட ஹாட்டோ புயல் தாக்கியது. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த பெரும்புயலால் கடல் அலைகள் சீற்றத்துடன் நகர வீதிகளுக்குள் பாய்ந்து மோதின.

புயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் மக்காவ் நகரில் பல்வேறு வங்கிகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடிக் கிடக்கின்றன. சாலையில் சென்ற கார்கள் வெள்ளத்தில் சிக்கி பாதி உயரத்துக்கு நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

விக்டோரியா துறைமுகம் பகுதியில் ஆவேசமாக மோதிய கடல் அலைகள், ஆர்ப்பரித்துக் கொண்டு அருகாமையில் உள்ள சாலைகளை வெள்ளக்காடாக மாற்றியது. குறிப்பாக, தாழ்வான தீவுப்பகுதியான ஹெங் ஃபா சுவேன் நகரம் முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல மரங்கள் முறிந்து கட்டிடங்களின்மீது சாய்ந்து கிடக்கின்றன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஹாங்காங் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. சுமார் 450 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கோரப் புயலின் தாக்கத்தால் பியர்ல் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் மூன்றுபேர் பலியானதாகவும், முப்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஹாட்டோ புயலின் தாக்கம் மக்காவ் நகரையொட்டியுள்ள சீனாவின் தெற்கு பகுதியிலுள்ள குவாங்டாங் மாகாணத்தையும் பதம் பார்த்தது.

 

குறிப்பாக, மக்காவ் நகரையொட்டியுள்ள சீனாவின் ஸுஹாய் நகரத்துக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஷென்ஸென் விமான நிலையத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், இந்நகரை இணைக்கும் அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங் நகரில் கடற்கரையோரத்தில் உள்ள உணவகத்தின் அருகே கடல் அலைகள் மோதுவதை இந்த லிங்-கின் வழியாக காணலாம்.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …