ஜம்மு-காஷ்மீர் மாநில கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகருக்குட்பட்ட பன்தாசவுக் பகுதியில் இன்று துணை ராணுவப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் உள்ளிட்ட இரு பாராளுமன்ற தொகுதிகளில் வரும் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவப் படையை சேர்ந்த சில வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஒரு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் பன்தாசவுக் பகுதியின் அருகேயுள்ள செம்போரா என்ற இடத்தை நெருங்கியபோது, லாரியை வழிமறித்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த அதிரடி தாக்குதலில் துணை ராணுவப் படையை சேர்ந்த ஆறு வீரர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, வீரமரணம் அடைந்தனர்.
லாரியின் டிரைவர் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த ஆறு வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என ஸ்ரீநகரில் இருந்து வெளியாகும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.