மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சீர்குலைந்துள்ள நேபாள நாட்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்ய சீனா முன்வந்துள்ளது.
நேபாள நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மழையினால் 27 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. ரப்தி மற்றும் புதிரப்தி ஆறுகளில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடுகிறது. கரை கடந்து வெளியேறிய வெள்ளநீர் அரித்துச் சென்றதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகள் சுமார் ஆயிரம் வீடுகள் வெள்ளநீரில் மூழ்கி முற்றிலுமாக அழிந்தன. சுமார் 35 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஐந்து நாட்களில் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 90-ஐ கடந்துள்ளது.
மேலும் காணாமல் போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் வெள்ள நிவாரணம் மற்றும் துயர் துடைப்பு பணிகளுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளிப்பதாக சீனா இன்று உறுதி அளித்துள்ளது.
நேபாளத்தில் சுற்றுப் பயணம் செய்துவரும் சீன நாட்டின் துணை பிரதமர் வாங் யாங் இன்று நடைபெற்ற இருநாடுகளின் துணை பிரதமர்களின் ஆலோசனை கூட்டத்தின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கிடையே, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்தின் ஹனுமான் தோக்கா தர்பார் சதுக்கம் பகுதியில் உண்டான நிலநடுக்கத்தால் சிதிலமடைந்த வரலாற்று சிறப்புமிக்க அரண்மனையை 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்து தருவதாக சீனா முன்னர் உறுதி அளித்திருந்தது.
17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒன்பது மாடிகளை கொண்ட இந்த அரண்மனையை புதுப்பிக்கும் பணிகளை சீன நாட்டின் துணை பிரதமர் வாங் யாங் மற்றும் நேபாள துணை பிரதமர் கிருஷ்ண பஹதூர் மஹாரா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.