கொரிய தீபகற்பத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.
தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது.
ஐ.நா. பொருளாதார தடை, உலக நாடுகளின் கண்டனம் என எதையும் பொருட்படுத்தாமல் தனது படைபலத்தை அதிகரித்து வரும் வடகொரியா, சமீபத்தில் ஜப்பான் கடல் பகுதியில் ஒரு ஏவுகணையை வீசி சோதனை நடத்தியுள்ளது.
வடகொரியா அணு ஆயுதங்களை பெருக்கி வருவது தொடர்பாக விரைவில் சீனாவும், அமெரிக்காவும் விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியா புதிய ஏவுகணையை சோதனை செய்துள்ளது. உள்நாட்டு தயாரிப்பான இந்த ஏவுகணையானது 800 கி.மீ. தூரம் சென்று வடகொரியாவின் எந்த நகரையும் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
இதேபோன்று வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேலும் சில புதிய ஏவுகணைகளை இந்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்கவும் தென் கொரியா திட்டமிட்டுள்ளது.