ஈராக் நாட்டின் மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்களது மனைவி, குழந்தைகளை மனித கேடயமாக்கி இராணுவத்துடன் உச்சக்கட்ட போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈராக்கில் பெரும் நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் ராணுவத்தின் கடும் தாக்குதலால் ஒவ்வொரு பகுதியாக இழந்து வந்தனர்.
கடைசியாக அவர்கள் வசம் மொசூல் நகரம் இருந்தது. அதை மீட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈராக் படைகள் போர் தொடுத்தன.
9 மாத தீவிர சண்டைக்கு பிறகு கடந்த சனிக்கிழமை மொசூல் நகரம் முற்றிலும் ஐ.எஸ். தீவிரகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.
இங்கு முகாமிட்டு சண்டையிட்டு வந்த ஐ.எஸ். தீவிரவாதிகளில் பலர் கொல்லப்பட்டு விட்டனர். பலர் மற்ற பகுதிகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
ஆனாலும், 200-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்போது மொசூல் நகருக்குள் உள்ளனர். அவர்கள் டைக்ரீஸ் ஆற்றின் மேற்கு பகுதியில் பழைய நகரையொட்டி உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருக்கிறார்கள். 180 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் கொண்ட இடத்தில் பதுங்கி இருந்தபடி ராணுவத்தினர் மீது தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறார்கள்.
அவர்களை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் அவர்களுடைய மனைவி- குழந்தைகளும் உள்ளனர். அவர்களை மனித கேடயமாக முன்னிறுத்தி பின்னால் இருந்தபடி சுடுகிறார்கள்.
200 தீவிரவாதிகளையும் ராணுவம் சுற்றி வளைத்து இருப்பதால் அவர்கள் தப்பி ஓடுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஒன்று, ராணுவத்திடம் சரணடைய வேண்டும், அல்லது கடைசி வரை சண்டையிட்டு மரணத்தை சந்திக்க வேண்டும்.
அவர்கள் அனைவரையும் சரண் அடையும்படி ராணுவம் வேண்டுகோள் விடுத்து வருகிறது. அதை ஏற்க மறுத்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள். அவர்களின் மனைவி- குழந்தைகள் பலியாகி விடக்கூடாது என்பதற்காக ராணுவம் எதிர் தாக்குதலை நடத்தவில்லை. எந்த நேரத்திலும் இந்த சண்டை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொசூல் நகரம் மீட்கப்பட்டு விட்டாலும் ஈராக்கில் இன்னும் சில பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் உள்ளது. ஜசிரா பிராந்தியத்தில் உள்ள டல்அப்தார், அன்பார் பிராந்தியத்தில் உள்ள அல்குயிம், ரபா, அனா ஆகிய நகரங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருக்கின்றன.
இந்த நகரங்களை மீட்பதற்கு ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இவற்றையும் மீட்டு விட்டால் ஈராக்கில் ஒட்டு மொத்தமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள்.
தற்போது சிரியாவில் உள்ள பல பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. அவை ஈராக்கின் எல்லையில் இருக்கின்றன. அங்குள்ள அல்பு கமால் நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் உள்ளது. அங்கிருந்து ஈராக்குக்குள் நுழைந்து தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த இடத்திலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
மொசூல் நகரம் மீட்கப்பட்டதையடுத்து அமெரிக்க துணை ராணுவ தளபதி ஸ்டீபன் டவுன்சென்ட் கூறும் போது, ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்னும் ஈராக்குக்கு அச்சுறுத்தலாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை அழிக்கும் நடவடிக்கை இன்னும் முற்று பெறவில்லை.
ஈராக் ராணுவம் தொடர்ந்து அந்த பணிகளை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.