Thursday , November 21 2024
Home / முக்கிய செய்திகள் / முள்ளிக்குளம் மக்களை சந்தித்த வடமாகாண ஆளுனர்

முள்ளிக்குளம் மக்களை சந்தித்த வடமாகாண ஆளுனர்

முள்ளிக்குளம் மக்களை நேரடியாக சந்தித்து போராட்டத்துக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருவேன் என்று வடமாகாண ஆளுனர் உறுதியளித்துள்ளார்.
மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று மன்னாருக்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே நேற்று மாலை நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்களை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு வருகை தந்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையை சந்தித்து உரையாடினார்.

இதன்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை,வன்னி மாவட்ட கிறிஸ்தவமத இணைப்பாளர் பாஸ்டர் சந்துரு உற்பட வடமாகாண ஆளுனரின் இணைப்பாளர்,செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நில மீட்பு போராட்டம் இடம்பெற்று வரும் பகுதிக்கு விஜயம் செய்த வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

வடமாகாணத்தில் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் முதல் முதலாக வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டத்தில் பங்கெடுத்தமை குறித்து முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது போராட்டம் குறித்தும்,தமது பூர்வீக நிலம் விடுவிப்பு குறித்தும் முள்ளிக்குளம் கிராம மக்கள் வடமாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

-தமக்கு எவ்வித உதவிகளும் வேண்டாம் எனவும்,தமது பூர்வீக நிலங்களை விட்டு கடற்படையினரை வெளியேற்றி தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் எனவும்,தமது நிலம் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த முள்ளிக்குளம் கிராம மக்கள், நிலம் விடுவிப்பிற்கு வடமாகாண ஆளுனர் துரித முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே கடந்த காலங்களில் வாழ்ந்து வந்து இடம் பெயர்ந்த மக்களின் காணிகளில் மக்கள் மீண்டும் குடியேற்றப்பட வேண்டும். எனவே முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு நான் மதிப்பளிக்கின்றேன்.

உங்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியை சந்தித்து முழுமையான விபரங்களையும் சமர்ப்பித்து நல்லதொரு முடிவை பெற்றுக்கொண்டு சில தினங்களில் மீண்டும் முள்ளிக்குளம் வந்து உங்களை சந்திக்கின்றேன் என தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv