ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டனுக்குள் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள பிறநாட்டினர் நுழைய விசா தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.
இனி வரும்காலங்களில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மக்கள் பிரிட்டனுக்குள் வருவதானால் விசா நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என பரவலான கருத்து நிலவியது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து வருபவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, பிரிட்டன் நாட்டின் பிரபல நாளேடான ‘தி கார்டியன்’ பத்திரிகையின் அரசியல் பகுதி செய்தி ஆசிரியர் ஆண்ட்ரு ஸ்பேரோ வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கட்டுரையில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்குள் விசா இன்றி வந்து போகலாம். ஆனால், நிரந்தரமாக தங்க முடியாது.
அப்படி நிரந்தரமாக தங்கி இங்கு பணியாற்ற வேண்டுமானால் பிரிட்டன் நாட்டு குடியுரிமைத்துறை விரைவில் அறிவிக்கவுள்ள புதிய விதிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.