பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில் புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வசிக்கும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் பிரான்ஸ் அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்களிக்க அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், அதன் பிராந்தியங்களான காரைக்கால், மஹே, ஏனாம் ஆகிய பகுதிகள் பிரெஞ்சு காலனிகளாக இருந்தது. புதுச்சேரி மற்றும் அதன் அருகாமை பகுதிகளில் வசிக்கும் பிரெஞ்சு குடிமக்கள் சுமார் 4600 வாக்காளர்கள் (ஆண் மற்றும் பெண்) நாளை நடைபெற இருக்கும் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.
புதுச்சேரியின் பிரெஞ்சு தூதரகம் மற்றும் லைசி பிரான்கெய்ஸ் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு வாக்குச் சாவடிகளும், சென்னை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படுகிறது.
காலை 8.00 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு இரவு 7.00 மணிக்கு நிறைவுபெறுகிறது. இத்துடன் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.