27ம் தேதி மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையம் வருகிறார். மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்லும் பிரதமர் மோடி அங்கு மாதாப்பூர் பஞ்சாயத்து பகுதியில் பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கும் என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.பின்னர் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து, புறப்பட்டு மாலை 5 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை வருகிறார். மாலை 5.05 மணிக்கு ஹெலிபேட் தளத்தில் இருந்து சாலை வழியாக புறப்படும் பிரதமர் மோடி 5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு 6.15 மணிக்கு புறப்படும் பிரதமர் மோடி 6.45 மணிக்கு மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார். ஓட்டலில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், கூட்டணிக் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.இதைத் தொடர்ந்து மறுநாள் காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக புறப்படும் பிரதமர் மோடி 8.35 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்கிறார். 8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு 9.30 மணிக்கு வருகிறார். அங்கு காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை நடக்கும் விழாவில் குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ள நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளத்திற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசுகிறார். இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.
பின்னர் காலை 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு பிரதமர் மோடி நெல்லை வருகிறார். நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி ஹெலிபேட் தளத்திற்கு வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் அருகில் உள்ள பெல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜ பொதுக்கூட்டத்தில் 11.15 முதல் 12.15 மணி வரை பங்கேற்று பேசுகிறார்.
பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு பிற்பகல் 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையம் செல்கிறார்.