பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தினர் ஸ்பிளிங்லி, காபு மலைப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸ் படையினரும் அந்தப் பகுதிகளை கூட்டாக சென்று சுற்றி வளைத்தனர்.
எல்லை பாதுகாப்பு படையினரின் வாகனத்தை பார்த்ததுமே பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த சண்டையின் முடிவில், லஷ்கர் இ ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான மக்சூத் அகமது குண்டு பாய்ந்து பலி ஆனார்.
இது தொடர்பாக குவெட்டா போலீஸ் ஐ.ஜி. அப்துல் ரசாக் சீமா நிருபர்களிடம் பேசுகையில், “பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து தகவல் அறிந்ததும் 3 நாட்களுக்கு முன்பாக அந்தப் பகுதிகளை சுற்றி வளைத்தோம். இந்த துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், மாங்கோபிர் பகுதியை சேர்ந்தவருமான மக்சூத் அகமது கொல்லப்பட்டார். கராச்சியிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பு உடையவர் இந்த மக்சூத் அகமது. ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் சிக்கி உள்ளன. பயங்கரவாதிகளை தேடும் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது” என கூறினார்.