தமிழர்கள் ஆகிய நாம் அநீதியாக எதையும் கேட்காது நீதியின் அடிப்படையில் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் ஒரு குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். பாரம்பரிய பொக்கிஷத்திற்கு உரித்தானவர்கள் அவற்றினைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை.
உலகத்தில் உள்ள பல நாடுகளில் இருந்தும் இங்கு வருகை தந்துள்ளீர்கள். எமது கலை கலாசாரம், பண்பாட்டினை பாதுகாக்க வேண்டுமென்ற காரணத்தினால் இங்கு வருகை தந்துள்ளீர்கள். அதையிட்டு பெருமையடைகின்றோம்.
தற்போது இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று புதிய பாதையில் செல்வதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். புதிய அரசியல் சாசனத்தினை உருவாக்கி அதன் மூலம் சமத்துவமும் சமாதானமும் ஏற்படுத்தப்படவுள்ளன.
அரசியல் சாசனம் வெற்றி பெற வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து, சுயகௌரவத்துடன், சுய அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழக்கூடிய வகையில் அந்த இலக்கை அடைய வேண்டிய கடமை எமது அனைவருக்கும் உரியது” என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.