நடுவானில் பறந்த அதிவேக சூப்பர் ஜம்போ ஜெட் விமானத்தின் மூச்சுக் காற்றால் அதை கடக்க முயன்ற சிறிய விமானம் குட்டிக்கரணம் அடித்து 10 ஆயிரம் அடிவரை கீழ் நோக்கி சென்றதாகவும் அதில் இருந்த 9 பயணிகள் காயமடைந்ததாகவும் தற்போது தெரியவந்துள்ளது.
எமிரேட்ஸ் விமானச் சேவை நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ரக சூப்பர் ஜம்போ ஜெட் ஏர்பஸ் A380-800 சம்பவத்தன்று துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அரபிக்கடலின் மீது சுமார் 34 ஆயிரம் அடி உயரத்தில் ஓமன் தலைநகர் மஸ்கட் நகரில் இருந்து சுமார் 630 கடல் மைல்கள் தூரத்தில் உள்ள வான் எல்லையில் பறந்தபோது, மாலத்தீவில் இருந்து துபாய் நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஒரு சிறியரக பயணிகள் விமானம் இரட்டை அடுக்கு இருக்கை வசதி கொண்ட அந்த ஜெட் ஏர்பஸ் விமானத்தை நெருங்கியது.
வழக்கமாக, கடல் நீரை கிழித்தபடி வேகமாக செல்லும் படகுகள் நீரில் காற்றலை போன்ற சுழல்களை ஏற்படுத்துவதுபோல், வளிமண்டலத்தை ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் அதிவேகமாக பறக்கும்போது விமானங்களில் இருந்து ஒருவிதமான சுழற்காற்று போன்ற எதிர்வீச்சு ஏற்படுவதுண்டு.
வானூர்தி அறிவியலின்படி, ‘டர்புலன்ஸ்’ என்றும் ‘ஜி-போர்ஸ்’ என்றும் அழைக்கப்படும் இந்த சுழற்காற்றில் அவ்வழியாக கடந்து செல்லும் சில விமானங்கள் சிக்கித் திணறிய வரலாறு உண்டு.
அவ்வகையில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த அந்த சிறிய விமானம், துபாயில் இருந்து சிட்னி நகரம் நோக்கி சென்ற ஜெட் ஏர்பஸ் பயணிகள் விமானத்தை கடக்க முயன்றது. அப்போது, ஜெட் விமானத்தின் கீழ் வந்த ஒரு மூச்சுக் காற்றால் குட்டிக்கரணம் அடித்த சிறிய விமானத்தில் இருந்த 9 பயணிகள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.
ஹெட் விமானத்தின் மூச்சுக்காற்று பட்டு போம்பாடியர் சாலஞ்சர் (Bombardier Challenger 604) ரகத்தை சேர்ந்த அந்த சிறிய விமானம் ஐந்துமுறை குட்டிக்கரணம் அடித்து சுமார் 10ஆயிரம் அடி வரை கீழ்நோக்கி சென்றதாகவும், அதில் இருந்த 9 பயணிகள் காயம் அடைந்ததாகவும் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகம் தற்போது குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி நடைபெற்ற இந்த விபத்தையடுத்து அந்த சிறிய விமானம் அருகாமையில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் படுகாயம் அடைந்த ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார் எனவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
இந்த விபத்துக்கு பின்னர் அந்த சிறிய விமானம் செப்பனிட முடியாத (ரிப்பேர்) அளவுக்கு சேதமாகி ‘கண்டம் கண்டிஷனில்’ கைவிடப்பட்டதாகவும் ஜெர்மனி நாட்டை சேர்ந்த அந்த தனியார் விமானச் சேவை நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக ஜெர்மனி நாட்டின் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பதை விளக்கும் சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.