துபாய்க்கு தப்பி ஓடிய தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய திட்டமிட்டுள்ளார். இத்தகவலை தாய்லாந்தின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா (50). விவசாயிகளுக்கு அரிசி வழங்கியதில் ஊழல் செய்ததாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
இதற்கிடையே யிங்லக் ஷினாவத்ரா மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக நடந்து வரும் விசாரணை இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.
விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் யிங்லக்ஷினாவத்ரா திடீரென மாயமாகி விட்டார். அதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் யிங்லக் ஷினாவத்ரா துபாய்க்கு தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கம்போடியா, சென்று அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக துபாய் சென்றுள்ளார். அவர் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அங்கிருந்து அவர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய திட்டமிட்டுள்ளார். இத்தகவலை தாய்லாந்தின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.