மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கியதில் மிகப்பெரும் குளறுபடி நடந்தது. கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற வட மாநிலங்களிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த மாணவர்களுக்கு மாநில அரசு, தொண்டு நிறுவனங்கள், தமிழ் சங்கங்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவியும், வழிகாட்டுதல்களையும் வழங்கின.
இப்படி தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கியதில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக அரசும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியமும் ஒன்றையொன்று மாறிமாறி குற்றம் சாட்டின. இதைப்போல தமிழக அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தை குறை கூறியிருந்தன.
இந்த குளறுபடிக்கான காரணம் குறித்து மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்து உள்ளது. இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்திருந்தது. இதனால்தான் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு சில மாணவர்கள் தடங்கல்களை சந்திக்க வேண்டியதாயிற்று. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 31 சதவீத மாணவர்கள் இந்த ஆண்டு கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர்.
எனவே இந்த ஆண்டு தமிழகத்தில் 170 (கடந்த ஆண்டு 149 மட்டுமே) தேர்வு மையங்களை சி.பி.எஸ்.இ. அமைத்து இருந்தது. இந்த மையங்களில் 1,07,288 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அந்தவகையில் கடந்த ஆண்டை விட 25,206 மாணவர்கள் கூடுதலாக தமிழகத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.
இப்படி சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் கூட இந்த ஆண்டு தேர்வு மையங்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே இந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளைப்போல அருகில் உள்ள அண்டை மாநில தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
அதன்படி தமிழகத்திலும், மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவின் எர்ணாகுளத்திலும் மையம் ஒதுக்கப்பட்டது. இது அந்த மாணவர்களின் இருப்பிடத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் தூரத்தை விட குறைவாகும்.
தமிழகத்தை சேர்ந்த எந்த மாணவருக்கும், அவர்கள் கேட்காமல் ராஜஸ்தான், கர்நாடகா, சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்படவில்லை. இதைப்போல தமிழில் தேர்வெழுத தேர்வு செய்த 24,720 மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.