டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று சிறுநீரை குடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி ஆவனம் செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார். எனினும், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக 2 நாட்களுக்குள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என விவசாயிகள் கெடு விதித்தனர். இருந்தாலும் நேற்று 39–வது நாளாக நீடித்தது.
40 வது நாளான இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்து போராட்டம் நடைபெறும் ஜந்தர்மந்தர் பகுதிக்கு விரைந்து வந்த போலீஸார், அய்யாக்கண்ணு உள்ளிட்ட 5 விவசாயிகளை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.