Thursday , November 21 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / டிரம்ப் கருத்தால் அமெரிக்காவுடனான உறவை தற்காலிகமாக துண்டிக்க பாகிஸ்தான் முடிவு

டிரம்ப் கருத்தால் அமெரிக்காவுடனான உறவை தற்காலிகமாக துண்டிக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்த கருத்தால் அந்நாட்டுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை சமீபத்தில் வெளியிட்டார். அதில், ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்திவரும் தாலிபான், ஹக்காணி உள்ளிட்ட பெருவாரியான தீவிரவாத
இயக்கங்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாகவும் டிரம்ப் காரசாரமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். மேலும், தேவைப்பட்டால் பாகிஸ்தானில் புகுந்து வான்வழி தாக்குதல்களை நடத்துவோம் என அமெரிக்க உள்துறை மந்திரி ட்ரில்லர்சன் பேட்டியளித்திருந்தார். போதாக்குறைக்கு அமெரிக்காவின் மேற்கண்ட கருத்துக்கள் அனைத்திற்கும் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மிகுந்த வரவேற்பு அளித்தன.

அடுத்தடுத்த வார்த்தை தாக்குதல்களால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், அமெரிக்காவின் புதிய தெற்காசிய கொள்கையை ஏற்கப்போவதில்லை என அறிவித்தது. ‘அமெரிக்காவிடமிருந்து நிதியையோ, ஆயுதங்களையோ நாங்கள்
எதிர்பார்க்கவில்லை, மரியாதையுடன் நடத்துங்கள்’ என பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவீத் பஜ்வா பரபரப்பு பேட்டியளித்தார்.

மேலும், ‘ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுவதற்காக பாகிஸ்தான் அரும்பாடுபட்டு வருகிறது. தீவிரவாதத்தை எங்களைப் போல வேறு யாரும் எதிர்த்து போராடியிருக்க முடியாது’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், நேற்று அந்நாட்டு பாராளுமன்ற செனட் சபையில் இது குறித்தான கேள்விகளை உறுப்பினர்கள் அடுக்கினர். அதற்கு பதிலளித்த வெளியுறவு மந்திரி ஹவாஜா முகம்மது ஆசிப், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கு இடையே தலைவர்கள் பயணமும் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தெற்காசிய கொள்கை குறித்து விவாதிப்பதற்காக வெளியுறவு உயரதிகாரிகள் அடங்கிய கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …