சிரியாவில் நடந்த விஷ வாயு தாக்குதலில் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுத்தும் வேதிபொருள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதென உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரினை கட்டுக்குள் கொண்டுவர அரசு வான்வழி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் கான் ஷேக்குன் நகரில் நேற்று காலை விஷ வாயுக்கள் கொண்டு வான்வழி தாக்குதல்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் 58 பேர் பலியாகினர்.
அவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.
இந்நிலையில், ஐ.நா. சபையின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் நேற்று நடந்த தாக்குதலில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. மரணத்தினை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் சுவாச பாதிப்பு உள்பட அதனையொத்த அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன.
அதனுடன், பாதிப்படைந்தவர்களுக்கு கரிம பாஸ்பரஸ் வேதிபொருட்களின் தாக்கம் இருந்துள்ளதற்கான அடையாளமும் வெளிப்பட்டுள்ளது. இந்த வேதிபொருள் நரம்பு மண்டல பாதிப்பினை ஏற்படுத்த கூடியவை என தெரிவித்துள்ளது.