கொரிய தீபகற்பத்தில் போருக்கு இடம் இல்லை என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் திட்டவட்டமாக கூறினார்.
வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் புதிய பொருளாதார தடை ஒன்றை விதித்தது. இதற்கு அமெரிக்கா தான் வழிவகுத்தது.
இதன்படி வடகொரியா நிலக்கரி, இரும்பு, இரும்புத்தாது, ஈயம், மீன், கடல் உணவுகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாக, வடகொரிய நாட்டுக்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைக்காமல் போகும்.
இதையடுத்து கொந்தளித்துப்போன வடகொரியா, மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்போவதாக அதிரடியாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் போர் மோகம் சூழ்ந்தது.
தொடர்ந்து வடகொரியாவும், அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது இல்லை என்று கூறுகிற வகையில், இரு தரப்பினரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் குவாம் தீவின் மீதான தாக்குதல் திட்டம் பற்றி ராணுவ உயர் அதிகாரிகள் தன்னிடம் விளக்கியபோது, அதை ஆய்வு செய்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தாக்குதல் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளார்.
இந்த நிலையில் வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரியாவின் அதிபர் மூன் ஜே இன், தான் பதவி ஏற்று 100 நாட்கள் ஆனதையொட்டி சியோல் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரியப்போரின் அழிவுகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைத்து தென் கொரியர்களும் கடுமையாக உழைத்து உள்ளனர்.
நான் என்ன விலை கொடுத்தேனும் இந்த தீபகற்ப பகுதியில் போரைத் தடுப்பேன். எனவே கொரிய தீபகற்ப பகுதியில் போர் கிடையாது என்பதை தென் கொரியர்கள் உறுதியாக நம்பலாம்.
எங்கள் உடன்பாடு இன்றி யாரும் கொரிய தீபகற்ப பகுதியில் ராணுவ நடவடிக்கை எடுக்க முடியாது.
அமெரிக்காவும், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்பும்கூட, வடகொரியா பற்றி அவர்கள் (தென்கொரியா) என்ன முடிவு எடுத்தாலும் பரவாய் இல்லை. ஆனால், தென்கொரியாவுடன் கலந்து ஆலோசித்து உடன்பாடு ஏற்படுத்தித்தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
ஒரு உறுதியான முடிவு எடுத்து வடகொரியாவுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்த டிரம்ப் முயற்சிக்கிறார்.
ஆனால் அவர் ராணுவ நடவடிக்கை எடுக்க விருப்பம் இருக்கிறது என்பதை காட்டிக் கொள்ள மாட்டார்.
வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டின் மீது அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை நாங்கள் திறம்பட நிராகரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.