ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமானது எனவும், திறமையான வீரர்களை இந்தியா கொண்டுள்ளதாகவும் அமைதிப்படை தலைவர் ஹெர்வ் லாட்சவுஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள அமைதிப்படை அமைப்பானது, உள்நாட்டு போர் நிலவும் நாடுகளில் அமைதி ஏற்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனது. இந்த அமைதிப்படையில் பல நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறனர். இந்தியாவும் இந்த அமைதிப்படைக்கு ராணுவ வீரர்கள் மற்றும் கனிசமான அளவு நிதியுதவியும் அளித்து வருகின்றது.
இந்நிலையில், தற்போது இதன் தலைவராக உள்ள ஹெர்வ் லாட்சவுஸ்-ன் பதவிக் காலம் இம்மாதத்துடன் முடிய உள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய லாட்சவுஸ் ,”அமைதிப்படையில் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளின் பங்களிப்பு அபாரமானது. திறமையான வீரர்களை கொண்டுள்ள இந்நாடுகள் தங்களது மகத்தான பணிகளை அமைதிப்படைக்காக வழங்கி வருகின்றனர். மொத்த வீரர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களிலான பங்களிப்பை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் வழங்கி வருகின்றன” என தெரிவித்தார்.
ஹெர்வ் லாட்சவுஸ்-ஐ தொடர்ந்து புதிய அமைதிப்படை தலைவராக ஜீன்-பியர் லாக்ரோயிஸ் அடுத்த மாதம் பொறுப்பேற்க இருக்கிறார். தற்போது வரை அமைதிப்படையில் 6763 இந்திய வீரர்கள் மற்றும் 782 காவல் அலுவலர்கள் பல்வேறு முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.