இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் இன்று டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இரட்டை இலை சின்னம் இருந்தால்தான் அதிக வெற்றியை பெற முடியும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.முக. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ரூ.10 கோடியை முன் பணமாக இடைத் தரகர் சுகேஷ் சந்திர சேகருக்கு கொடுத்ததாக டெல்லி போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து டெல்லி ஓட்டலில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ. 1 கோடியே 30 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இடைத்தரகர் சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தில், “இரட்டை இலையை பெற்றுத் தர டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசினார்” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டான். அதன் பேரில் டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ. 50 கோடி பேரம் விவகாரத்தில் என்ன நடந்தது? யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பதை அறிய தரகர் சுகேசை டெல்லி போலீசார் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். அவனை போலீசார் டெல்லியில் சில இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று சுகேசை கொச்சிக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அடுத்தக்கட்டமாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் பிரதான குற்றவாளியாகக் கருதப்படும் டி.டி.வி. தினகரனையும் டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் வழங்க கோர்ட் டில் அனுமதி பெறப்பட்டது. மேலும் அவர் வெளி நாட்டுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் உஷார் படுத்தப்பட்டன.