ஆப்கானிஸ்தான் நாட்டு தெற்கு பகுதியில் இன்று தலிபான் இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, அல்கொய்தா மற்றும் தலிபான் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கின.
நீண்ட காலமாக நடந்து வரும் இந்த போரில் பயங்கரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு அரசு படைகளிடம் அமெரிக்க அரசு ஒப்படைத்தது. அதன் பின்னர் அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க வீரர்கள் படிப்படியாக தங்கள் நாட்டுக்கு திரும்பினர்.
தற்போது அங்கு சுமார் 8,400 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். எனினும் 15 ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்தாலும், அரசு படைகளால் தலிபான்களை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அந்நாட்டின் 40 சதவீதம் பகுதிகள் தலிபான்களின் ஆதிக்கத்தின்கீழ் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு தெற்கு பகுதியில் தலிபான்களின் ஆதிக்கத்தின்கீழ் இயங்கும் ஹெல்மென்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர் காஹ் பகுதியில் உள்ள போலீஸ் தலைமை செயலகத்தின் அருகே இன்று தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், பெண்கள், குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.