பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. எம்.பி.யுமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் தான் முடிவு எடுக்கும். நான் அது பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
அம்மா எப்படி கட்சியை நடத்தினார்கள், எப்படி தனித்துவத்தை காண்பித்தார்கள் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தனிக்கட்சியாகத்தான் பாராளுமன்றத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
எங்களுக்குள் இதுவரை எந்த கூட்டணியும் இல்லை. அப்படி கூட்டணி வர வேண்டும் என்றால் கட்சித் தலைமை தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கும்.
பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி இல்லை. தமிழகத்தில் ஒரு குழல் துப்பாக்கிதான் உள்ளது. இரட்டை குழல் துப்பாக்கி என்பது நாம் பேசுவதுதான். இரட்டை குழல் துப்பாக்கி என்பது கிடையவே கிடையாது. இது அன்னப்பறவை பற்றி நாம் பேசுகிறோமே அது போலத்தான்.
ஒரு துப்பாக்கியில் ஒரு குண்டுதான் போகும். 2 குண்டுபோகாது. அது தவறான செய்தி.
மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக உள்ளது. ஆனால் கட்சிகள் இணக்கமாக இல்லை. அம்மா ஆட்சிக் காலத்தில் கூட மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாகத்தான் இருந்தது. அதற்கும் கட்சியின் இணக்கத்துக்கும் சம்பந்தம் கிடையாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பா.ஜனதா சரியான முடிவு எடுக்கவில்லை. நாங்கள் அதை எதிர்க்கிறோம். அதற்காக அமைச்சர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது தொடர்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நாங்கள் பேச இருக்கிறோம்.
இதில் மாநில கட்சிகளின் நிலைப்பாடு வேறு. தேசிய கட்சிகளின் நிலைப்பாடு வேறு.
சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக காங்கிரஸ் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருகிறது. இது அரசியல் நோக்கம் கொண்டது. தமிழகத்துக்கு தண்ணீர் தர காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீபக் மீஸ்ரா தீர்ப்பு தந்துள்ளார். இதை திசை திருப்புவதற்காகத்தான் காங்கிரஸ் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருகிறது.
கர்நாடகத்தில் வெற்றி பெறுவதற்காக தேசிய கட்சியான காங்கிரஸ் எடுத்த முடிவு இது. இவர்களைப்போல் பல கட்சிகளும் அவரவரே முடிவு எடுக்கிறார்கள். இதில் எங்களுக்கு சம்பந்தம் கிடையாது.
தி.மு.க. லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று விரும்பினால் 2006-ம் ஆண்டு அமைத்திருக்கலாமே. அப்போது அமைக்காத மு.க.ஸ்டாலின் இனி லோக் ஆயுக்தாவை அமைக்கப் போகிறாரா? தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்புவது தி.மு.க.வின் நாடகம். அதை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்கள் ஆட்சி செய்த காலத்தில் நடந்த ஊழல்களையே இன்னும் எடுக்க வேண்டி இருக்கிறது. செயல் தலைவர் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் செயலற்ற முறையில் பேசிக் கொண்டிருக்கிறார்.