Sunday , August 24 2025
Home / முக்கிய செய்திகள் / அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது, நாம் தனித்தே செயல்பட்டு நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என சேலத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடந்தது.

கூட்டத்திற்கு மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.செம்மலை தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, முன்னாள் எம்.பி. அர்ச்சுணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.கே. செல்வம், பல்பாக்கி கிருஷ்ணன், சிவபெருமான், எஸ்.சி.வெங்கடாசலம், எம்.கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், காமராஜ், கணேசன், கோவிந்தன், இளையகண்ணு, மாதேஸ்வரன், அழகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தனித்தே செயல்பட வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியில் இணையக்கூடாது என்றும் வலியுறுத்தினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 8, 9-ந் தேதிகளில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை கண்டறிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ. மூலம் விசாரித்து உண்மை கண்டறிய தமிழக அரசு பரிந்துரை செய்யாமல் வாய் மூடி மவுனியாக காலத்தை கடத்துவதை சேலம் மாவட்ட அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி வன்மையாக கண்டிக்கிறது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்ததும், அதை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். பணப் பட்டுவாடா பட்டியலில் உள்ள அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஓ.பி.எஸ். அணியுடன் இணைப்பு விழா என்ற பெயரில் நாடகம் நடத்தி சசிகலா குடும்பத்தினரின் ஆதரவை பெற்று செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. அம்மா அணியுடன் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி இணையக்கூடாது என்று வற்புறுத்துகிறோம், நாம் தனித்தே செயல்பட்டு நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி சேலம் மாவட்ட தொண்டர்களின் பலத்தை நிரூபிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மற்றும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் மேயர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் சண்முகம், ஜெயப் பிரகாஷ், தொழிற்சங்க பாலகிருஷ்ணன், வக்கீல் அருள்புஷ்பராஜ் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv