கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்காவும், தென்கொரியாவும் இன்று நடத்தும் கூட்டு போர்ப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடை விதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம் தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா அதிரடியாக அறிவித்தது.
அதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “அந்த நாட்டின் மீதான பிரச்சினையில் ராணுவ தீர்வு காண்பதற்கு போர்த் தளவாடங்களையும், ஆயுதங்களையும் லோடு ஏற்றியாகி விட்டது, வடகொரியா தனது பாதையை மாற்றிக்கொள்ளாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும்” என எச்சரித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் நடத்துகிற கூட்டு போர்ப்பயிற்சி கொரிய தீபகற்ப பகுதியில் இன்று தொடங்குகிறது. இது தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டு போர்ப்பயிற்சி, வடகொரியாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி, வடகொரிய அரசின் செய்தித்தாள் ‘ரோடங்க் சின்முன்’ நேற்று வெளியிட்ட செய்தியில், “வர இருக்கிற அமெரிக்க, தென் கொரிய கூட்டு ராணுவ பயிற்சி பொறுப்பற்றது. ஒரு அணு ஆயுதப்போரின் கட்டுப்பாடற்ற கட்டத்தில் நிலைமையை கொண்டு செல்கிறது” என கூறப்பட்டுள்ளது.
மேலும், “எங்கள் படை எந்த நேரத்திலும் அமெரிக்காவை தாக்குதல் இலக்காகக் கொள்ளும். குவாம், ஹவாய் அல்லது அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் இரக்கமற்ற தாக்குதல் நடத்த முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.