அமெரிக்காவில் வரலாறு காணாத மழையால் ஹூஸ்டன் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் 1½ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் தென் பகுதியில் மையம் கொண்டு இருந்த ஹார்வி புயல் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. இதனால் அங்குள்ள ஹூஸ்டன் நகரம், ஆஸ்டின் நகரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடற்கரை நகரமான ஹூஸ்டனில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. அங்கு 3 நாளில் மட்டும் 125. செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
இதனால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகரின் 3-ல் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது.
ஹூஸ்டன் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் 1½ கோடி பேர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.
அவர்களில் பலரை மீட்க முடியாத அளவுக்கு வெள்ள நிலைமை மோசமாக உள்ளது. 32 ஆயிரம் பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர்.
எங்கு பார்த்தாலும் வெள்ளமாக இருப்பதால் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. ஒரு சில சாலைகள் தவிர, மற்ற சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தாலும், போதிய ஆட்கள் இல்லாததால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 12 ஆயிரம் பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அது போதுமானதாக இல்லை என்று மக்கள் கூறினார்கள்.
வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக மக்கள் வெளியே நடமாடாமல் இருப்பதால் இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.