Thursday , November 21 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / அமெரிக்காவில் பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையங்களில் ஊடுருவல் – ரஷிய எம்.பி. மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையங்களில் ஊடுருவல் – ரஷிய எம்.பி. மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணைய தளங்களில் ஊடுருவி கிரெடிட் கார்ட் தகவல்களை களவாடி 16.9 கோடி டாலர்கள் இழப்பு உண்டாக்கிய ரஷிய நாட்டு பாராளுமன்ற எம்.பி.யின் மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரோமன் செலெஸ்னேவ்(32). ரஷிய பாராளுமன்ற உறுப்பினர் வலேரி செலெஸ்னேவ் என்பவரின் மகனான இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாலத்தீவு நாட்டுக்கு சென்றிருந்தபோது திடீரென்று மாயமானார். அவர் அமெரிக்க உளவுத்துறையினரால் கடத்தப்பட்டது பின்னர் தெரியவந்தது.

கடந்த 2009 மற்றும் 2013 ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்காவில் உள்ள சுமார் 500 பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையதளங்களுக்குள் ஊடுருவி, அங்கு வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யும் பரிவர்த்தனையை ரோமன் செலெஸ்னேவ் மோப்பம் பிடித்து வந்துள்ளார்.

இதுபோல் ஆயிரக்கணக்கான கிரெடிட் கார்டுகளில் உள்ள சங்கேத குறியீடுகள் தொடர்பான விபரங்களை சேகரித்த இவர், அந்த ரகசியங்களை போலி கிரெடிட் கார்டுகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விலைக்கு விற்றுள்ளார்.

அந்த தகவல்களின் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்த மோசடி கும்பல் அவற்றை வைத்து மேற்படி நிறுவனங்களுக்கு சொந்தமான இணையதளங்களுக்குள் ஊடுருவி, சுமார் 16.9 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பெரும் பண மோசடியில் ஈடுபட்டு வந்தது.

இதுதொடர்பான, புகார்களையடுத்து விசாரணை நடத்திய அமெரிக்க ரகசிய போலீஸ் துறையினர் இந்த மோசடிக்கு மூலக்காரணமாக இருந்த ரோமன் செலெஸ்னேவை மாலத்தீவில் ரகசியமாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்தனர்.

பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட ரஷியாவை சேர்ந்த ரோமன் செலெஸ்னேவுக்கு எதிராக மேற்படி மோசடி தொடர்பாக வாஷிங்டன், நெவேடா மற்றும் ஜார்ஜியா நீதிமன்றங்களில் மோசடி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில், மேற்கு வாஷிங்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ரிச்சர்ட் ஜோன்ஸ், குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
ரஷிய நாட்டை சேர்ந்த பாராளுமன்ற எம்.பி.யின் மகனுக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டு சிறை தண்டனை விதித்திருப்பது அமெரிக்க நீதித்துறையின் செயல்பாட்டை உணர்த்தும் வகையிலும், ரஷிய அதிபர் புதினுக்கு எரிச்சலூட்டும் விதமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய இணையத்தள தாக்குதலாக கருதப்படும் இந்த வழக்கு தவிர நெவேடா மற்றும் ஜார்ஜியா நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் இரு மோசடி வழக்குகளிலும் ரோமன் செலெஸ்னேவுக்கு அதிகபட்ச சிறை தண்டனை காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி

கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு இலங்கையர் …