அமெரிக்காவின் நியூஜெர்சியில் தாய் மற்றும் மகன் படுகொலை வழக்கில் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ஹனுமந்தராவ் (45). இவரது மனைவி நாரா சசிகலா (40). இவர்களுக்கு அனீஸ் சாய் என்ற 7 வயது மகன் இருந்தான்.
இவர்கள் அமெரிக்காவின் நியூஜெர்சியில் பர்லிங்டன் நகரில் ஒரு அடுக்கு மாடி வீட்டில் தங்கியிருந்தனர். கணவன்-மனைவி இருவரும் ‘சாப்ட்வேர்’ என்ஜினீயர் ஆக பணிபுரிந்தனர். நாரா சசிகலா வீட்டில் இருந்தபடி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அலுவலகத்தில் பணிபுரிந்து மாலையில் ஹனுமந்தராவ் வீடு திரும்பினார். அப்போது சசிகலாவும் அவரது மகன் அனீஸ் சாயும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
அவர்களது உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. உடலின் பல இடங்களில் கத்தி குத்து காயங்கள் இருந்தன. கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்பன போன்ற தகவல்கள் தெரியாமல் இருந்தது.
சமீப காலமாக அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. எனவே இத்தாக்குதலும் இது போன்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் இக்கொலையை ஹனுமந்தராவ் செய்திருக்க வேண்டும் என சசிகலாவின் பெற்றோர் சுங்கரா வெங்கடேசுவரராவ், கிருஷ்ண குமாரி அகியோர் தெரிவித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்களான இவர்கள் விஜயவாடாவில் தங்கியுள்ளனர். ஹனுமந்தராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் உள்ளது. அதை அறிந்த எங்களது மகள் சசிகலா கண்டித்தாள்.
எனவே எங்களது மகளையும், பேரனையும் ஹனுமந்தராவ் கொலை செய்து விட்டார் என கூறியுள்ளனர்.