பணப் பிரச்னையால் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் அருகே என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவர் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், விவசாயி செல்வராஜ் அரசின் தொகுப்பு வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டி உள்ளார். இதற்கு மானியமாக 55 ஆயிரம் ரூபாய் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி பாப்பாத்தி மற்றும் அவரது மகன் ராஜ்குமார், வங்கியில் உள்ள பணத்தை எடுத்து தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் செல்வராஜ் அதற்கு மறுத்ததால், கடந்த சில தினங்களாகவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, தனது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தில் 30 ஆயிரம் ரூபாயை எடுத்த செல்வராஜ், அதை மனைவியிடம் கொடுத்துள்ளார். ஆனால், மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொடுக்க வேண்டுமென மனைவியும், மகனும் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், செல்வராஜ் அதற்கு மறுத்ததால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பாப்பாத்தி மற்றும் அவரது மகன் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து, செல்வராஜின் கை, கால்களை கட்டிப்போட்டு மண்வெட்டி பிடியால் அவரை சராமரியாக தாக்கிவிட்டு, தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த செல்வராஜை, அவரது தம்பி கருப்பையா உள்ளிட்டோர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜின் மனைவி பாப்பாத்தி மற்றும் அவரது மகன் ராஜ்குமார் ஆகியோரை தேடிவந்தனர். இந்நிலையில், நாமக்கல் அருகே வேட்டாம்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த பாப்பாத்தி மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பணத்துக்காக இதுபோன்ற கொலைகள் அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்க, பொதுமக்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டியது அவசியமென்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கொலைக்கு பணம் தான் முக்கிய காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துக்காக, மனைவியும், மகனும் இணைந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல் மாவட்ட மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.