உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் – மனோஜ் பாண்டியன்
அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் தான் உள்ளனர் என மனோஜ் பாண்டியன் பேசியுள்ளார்.
அ.தி.மு.க.வை கைப்பற்றும் முயற்சியாக தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார்.
இதன் முதற்கட்டமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், காஞ்சீபுரம் மேற்கு கிழக்கு, மத்திய மாவட்டம், தென் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இன்று நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தது.
இதில் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, பாண்டிய ராஜன், நத்தம் விசுவநாதன், செம்மலை, எம்.பி.க்கள் மைத்ரேயன், பி.ஆர்.சுந்தரம், அசோக்குமார், சத்யபாமா, முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு தலைவர்களும், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்கள்.
இதில் மனோஜ் பாண்டியன் பேசும்போது கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் உள்ள உண்மையான தொண்டர்கள், நிர்வாகிகள் இங்குதான் உள்ளனர்.
அ.தி.மு.க.வுக்கு சசிகலாவால்தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு முதன்முதலில் எதிர்ப்பு குரல் கிளம்பியது கொங்கு மண்டலத்தில் தான். நாளுக்கு நாள் சசிகலாவுக்கு எதிர்ப்பு குரல் அதிகமாகி கொண்டே வருகிறது. எனவே சசிகலாவை கட்சியில் இருந்து ஓடஓட விரட்டுவோம். அ.தி.மு.க.வில் உள்ள துரோகிகளும் ஓரம் கட்டப்படுவார்கள்.
டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் இன்று துணை பொதுச்செயலாளர் என்று சொல்லிக் கொள்கிறார். இவர் மீதும் வழக்குகள் உள்ளதால் விரைவில் அவர் ஜெயிலுக்கு செல்வார்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்கும் வகையில் விசாரணை கோரி மேற்கொள்ள உள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ்நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.
உண்ணாவிரதத்துக்கு நாம் கேட்கும் இடத்தை தர போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். ஆனாலும் நமது போராட்டம் வெற்றி அடையும். தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். இது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.