Saturday , November 16 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை – பாமக நிறுவனர் ராமதாஸ்

சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை – பாமக நிறுவனர் ராமதாஸ்

சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை – பாமக நிறுவனர் ராமதாஸ்

சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக இன்று கூடிய சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவையாகும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்த செயல், அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த வாக்காளப் பெருமக்களை அவமானத்தில் கூனிக் குறுக வைத்திருக்கிறது.

சட்டப்பேரவையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே தங்களின் பொறுப்பை உணராமல், செயல்பட்டுள்ளனர்; தங்களின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளனர். ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா? எனக் கேள்வி எழுந்திருப்பதாலும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாராலும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் உறுப்பினர்களின் உண்மையான மனநிலையை அறியும் வகையில் நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவினரும், பன்னீர்செல்வம் அணியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய சூழலில் இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. அதை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் அவர் தவறு இழைத்து விட்டார்.

பேரவைத் தலைவர் கடமை தவறி ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட சூழலில், அதை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவது தான் சரியான தீர்வாகும். இதைவிட மோசமான ஜனநாயகப் படுகொலைகள் நிகழ்ந்த போதெல்லாம் நீதிமன்றங்கள் தலையிட்டு ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளன.

இதையெல்லாம் உணராமல் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு வன்முறை நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளனர். இந்த வன்முறையில் பேரவைத் தலைவர் மற்றும் செயலாளரின் இருக்கைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. மைக்குகள் உடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற வன்முறைகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை போட்டிப் போட்டுக் கொண்டு படுகொலை செய்திருக்கின்றனர். இரு கட்சி உறுப்பினர்களும் தங்களின் ஜனநாயகக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

மக்களின் உணர்வுகளை மதித்து தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுங்கட்சிக்கு ஆணையிட வேண்டும். அவை அமைதியாக நடப்பதை பேரவைத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …