சென்னை: ‘நீட்’ தேர்வு தொடர்பாக, மூன்று கேள்விகளை எழுப்பிய, பா.ஜ., மாநிலத் தலைவர் தமிழிசைக்கு, காங்., – எம்.எல்.ஏ., விஜயதரணி, மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.
‘நீட்’ தேர்வுக்கு, விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள, காங்., தலைவர்களுக்கு, தமிழிசை சமூக வலைதளங்களில், மூன்று கேள்விகளை எழுப்பினார்.
‘நாடு முழுவதும், நீட் தேர்வு என்ற கொள்கை முடிவை, முதன் முதலில் கொண்டு வந்தது யார்; நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடியது, காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் மனைவி நளினி தானே; கல்வியை, மாநில பட்டியலில் இருந்து பிரித்து, பொதுப் பட்டியலில் சேர்த்தது காங்கிரஸ் தானே’ என, கேட்டிருந்தார். அதற்கு பதிலாக, காங்., – எம்.எல்.ஏ., விஜயதரணி,மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவி அனிதாவின் மரணம் குறித்து, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், பா.ஜ., தலைவர் தமிழிசை, மூன்று கேள்விகளை எழுப்பி உள்ளார். அவருக்கு நான் மூன்று கேள்விகளை எழுப்புகிறேன்…
1) மாநில பாடத்திட்டத்தில் படித்த, தமிழக மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வில், மத்திய பாடத்திட்டத்தில் இருந்து, கேள்விகளை கேட்டது யார்?
2) தமிழகம் போன்ற மாநிலங்களில், சமூக நீதி என்ற அடிப்படை கல்விக் கொள்கை பின்பற்றப்படுவதை, முழுவதுமாக புறக்கணிக்கும், மத்திய கல்விக் கொள்கையை திணிப்பது ஏன்?
3)கல்வி பொதுப் பட்டியலில் தான் இருக்கிறது. ஆனால், மத்தியப் பட்டியலில் இருப்பதுபோல், ஒரு பார்வையை செலுத்தி, தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட, ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டத்தை, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பாமல், மாநிலத்திற்கான உரிமைகளை பறிப்பது யார்?
இவ்வாறு விஜயதரணி தெரிவித்துள்ளார்.