வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பதற்கு, வரும் செவ்வாய்க்கிழமை வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இன்று முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி துரைசாமி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், அதிகாரிகள் கேட்கும்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக தரவேண்டும் என்றும், வாகன விபத்தில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது, என்றும் தெரிவித்தார்.
லாரி ஓட்டுநர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த உத்தரவை லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, ஓட்டுநர் உரிம தகவல்களை கணினி மயமாக்கிவிடலாமே என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, இதுகுறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்வதாகவும், திங்கள்கிழமை வரை அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்கும் உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, செவ்வாய் கிழமை வரை அசல் ஓட்டுநர் உரிமத்தை, வாகன ஓட்டிகளிடம் கேட்பதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் நீதிபதி துரைசாமி பரிந்துரைத்து, வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
https://www.youtube.com/watch?v=AU88D3CdCwg