உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், போஸ்டர், கட்-அவுட் வைக்க தடைவிதித்து கடந்த மாதம் ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் செய்யப்படும் விளம்பரங்களில் உயிர் உள்ளவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன. அப்படி செய்தால்தான், அந்த விளம்பரத்துக்கு உயிரோட்டம் இருக்கும். எனவே, உயிர் உள்ளவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்கக்கூடாது என்ற நீதிபதியின் உத்தரவை மட்டும் ரத்து செய்யவேண்டும். இந்த உத்தரவினால், அரசுக்கு வரவேண்டிய வருமானம் பாதிக்கப்படுகிறது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘வருவாயை மட்டும் தமிழக அரசு கருத்தில் கொள்ளக் கூடாது. பொது இடங்களில் பேனர், கட்-அவுட் வைப்பதால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. வருவாய் கிடைக்கிறது என்பதற்காக மக்களை துன்புறுத்தக்கூடாது. அண்டை மாநிலமான கேரளாவில் தேர்தல் நேரங்களில் மட்டும் தான் பேனர்களையும், போஸ்டர்களையும் பார்க்க முடியும். அதுவும் கூட மூங்கில் தட்டிகளால் வைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு அதிகமாக எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே, பேனர் மற்றும் கட்-அவுட் விஷயத்தில் அதற்கு அனுமதியளிக்கும் அரசின் முடிவுகளை மறுஆய்வு செய்வதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் தற்போதுள்ள சூழ்நிலையில், இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே இந்த வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வுக்கு மாற்றுகிறோம் என உத்தரவிட்டு, விசாரணையை 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.