திண்டிவனம்: ”18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துள்ளதன் மூலம், சபாநாயகர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வரும்” என்று தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் அ.தி.மு.க., (அம்மா) சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, சென்னையிலிருந்து காரில் சென்ற தினகரனுக்கு, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் டோல்கேட்டில் நேற்று காலை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் அணியில் 21 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இது இல்லாமல் மறைமுகமாக 10 பேர் ஆதரவு தருகின்றனர். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலைமை வந்தால், பழனிசாமி நிச்சயமாக வீட்டிற்கு செல்வார். இதனால்தான் குறுக்கு வழியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் உச்சநீதிமன்றம் வரையில் சென்று நியாயம் கேட்டு போராடுவார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தொப்பியை போட்டுக்கொண்டு எனக்கு பிரச்சாரம் செய்த போது என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துள்ளதின் மூலம், சபாநாயகர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு வரும். கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் எந்தவித முகாந்திரமும் இல்லாமல் ,18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்துள்ளது செல்லாது. தில்லு, முல்லு செய்து ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி ஆட்சியை இந்த மாத இறுதிக்குள் வீட்டிற்கு அனுப்பு விடுவோம். சட்டசபையில் ஓட்டெடுப்பு நடக்கும் போதுதான், கட்சியின் கொறடா உத்தரவு செல்லும். மற்ற நேரத்தில் செல்லாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.,க்கள் கோர்ட்டிற்கு சென்று தடை வாங்கி, சட்ட சபை ஓட்டெடுப்பில் கலந்து கொண்டு, எடப்பாடி ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள். உள்ளாட்சி தேர்தல் வருவதற்குள் எடப்பாடி அணியினர் ஆட்சியில் இருக்கமாட்டார்கள். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் எது வந்தாலும், நாங்கள் எடப்பாடி மற்றும் அவர்களுக்கு பின்னால் செயல்படும் பா.ஜ.,மட்டுமல்ல வேறு எந்த கட்சியாக இருந்தாலும், அவர்கள் முகத்தில் நாங்கள் வெற்றி பெற்று கரியை பூசுவோம். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.
https://www.youtube.com/watch?v=s6TlUZ8k96c