த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஏழை, எளிய நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையின் விலையை தமிழக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கதக்கது.
வருகிற நவம்பர் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை ரூ.13.50 வில் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையின் விலை உயர்வை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தொடர்ந்து ரூ.13.50 விற்கே வழங்கவேண்டும். மாநில அரசு அதற்கான மானிய தொகையை மத்திய அரசிடமிருந்து பெற்றுதர வேண்டும், இல்லையென்றால் மாநில அரசே அதற்கான செலவை ஏற்று மானியத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.