மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் – வாகை சந்திரசேகர்
மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர் என்று வாகை சந்திரசேகர் பேசினார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தொடர் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
தங்கசாலை மணிக்கூண்டு அருகில் டி.லோகேஷ் தலைமையில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நிறையபேர் நாங்கள் தான் முதல்- அமைச்சர் என்றனர். ஆனால் அவர்களுக்கு டெபாசிட் கிடைக்க வில்லை. மு.க.ஸ்டாலினை தான் மக்கள் ஏற்றுக் கொண்டனர். நம்பிக்கை வாக்கெடுப் பின்போது சட்டசபையில் திட்டம் போட்டு எதிர்க்கட்சிகளை வெளியேற்றி விட்டனர். மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டார்.
ஜல்லிக் கட்டு போராட்டத்தில் இளைஞர்களையும், மாணவர்களையும் தாக்கிய போலீஸ் அதிகாரிகளை வெள்ளை சீருடையில் சட்டமன்றத்துக்குள் அனுப்பி மு.க.ஸ்டாலினை அடிக்க வைத்தார்கள். அவருடன் இருந்த உறுப்பினர்களையும் தாக்கினார்கள். சட்டைகளை கிழித்தார்கள். பின் அனைவரையும் வெளியே தூக்கி வீசினர்.
இது மக்கள் மத்தியில் ஆளுங்கட்சி மீது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவும், சசிகலாவும் காலில் விழும் கலாசாரத்தை கொடுத்தனர். ஆனால் மு.க.ஸ்டாலின் காலில் விழக் கூடாது என்றார். பிறந்த நாளுக்கு புத்தகங்கள் தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழக மக்கள் ஆட்சி மன்றத்துக்கு தயாராகி விட்டார்கள்.
மு.க.ஸ்டாலினை முதல்- அமைச்சராக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டனர். அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞருக்கு பிறகு பொதுமக்களை ஒட்டு மொத்தமாக ஈர்க்கின்ற தலைவராகவும், நேசிக்கின்ற தலைவராகவும் மு.க.ஸ்டாலின் மாறி இருக்கிறார். அவர்தான் தமிழகத்தை ஆள தகுதியானவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நடிகர்கள் ராதாரவி, வாசுவிக்ரம், இமான் அண்ணாச்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.




