சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி – தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி, பெண்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சாடினார்.
பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் ஏதும் அதிமுக அரசு எடுக்கவில்லை. பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்களைக் காக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பழனியின் மகள் ரித்திகாவை (3) கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை. இந்நிலையில் சிறுமி குப்பைக் கிடங்கில் சடலமாக கிடந்தாள்.
எண்ணூர் போலீஸார் விசாரணையில், குழந்தையிடம் இருந்த நகைக்காக அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரேவதி என்பவர் கடத்தி கொலை செய்தது அம்பலமானது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை ரித்திகாவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. தற்போதைய அதிமுக அரசு செயல்படாத அரசாக உள்ளது. பெருமளவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்குள்பட்டும், நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டும் வருகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பிற்கான திட்டம் எதையும் இந்த அதிமுக அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை கூவத்தூரில் காத்து கிடந்தது. மேலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை தூக்கிப் போட காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. காவல்துறையின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை.
எனவே சசிகலாவின் பினாமி முதல்வர் பழனிசாமி பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட போரூர் சிறுமி ஹாசினியின் குடும்பத்தினரையும் அண்மையில் ஸ்டாலின் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.