சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மு.க.ஸ்டாலின் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவங்கள் குறித்து குடி யரசுத் தலைவரிடம் புகார் அளிப்பதற்காக ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அன்று மாலை குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதைத் தொடர்ந்து டெல்லி யிலேயே தங்கிய ஸ்டாலின், நேற்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப் போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார்.
20 நிமிடங்கள்..
திமுக முதன்மைச் செய லாளர் துரைமுருகன், மாநிலங் களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, திருச்சி சிவா, தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக் கரசர் ஆகியோரும் இருந்தனர். சோனியா காந்தியுடன் ஸ்டாலின் சுமார் 20 நிமிடங்கள் பேசினார். அப்போது ராகுல் காந்தி, துரைமுருகன் ஆகியோர் மட்டுமே இருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் நடந்து வரும் மாற்றங்கள், கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் ஆகியவை குறித்து சோனியாவிடம் ஸ்டா லின் விரிவாக எடுத்துக் கூறி யுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன். அப்போது அவரிடம் திமுக தலைவர் கருணா நிதியின் சார்பில் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கருணா நிதியின் உடல்நலம் குறித்து அவர் விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தியும் உடனிருந்தார். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து எடுத்துக் கூறினேன். பொதுவான அரசியல் சூழல் குறித்தும் சோனியா, ராகுல் இருவரிடமும் விவாதித்தேன்’ என தெரிவித்துள்ளார்.
சசிகலா குறித்து ஆலோசனை
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் உதவியை அதிமுக நாடியிருப்பதாக செய்தி கள் வெளியாகியுள்ளது. இந் நிலையில் சோனியா, ராகுலை ஸ்டாலின் சந்தித்துப் பேசி யிருப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 20 நிமிடங்கள் சோனியா விடம் பேசிய ஸ்டாலினும், துரைமுருகனும், தமிழக மக்கள் மத்தியில் சசிகலாவுக்கு இருக்கும் எதிர்ப்பு குறித்தும், அதிமுக 3 அணிகளாக செயல்படுவது குறித்தும் எடுத்துக் கூறியுள்ளனர். வழக்குகளுக்காகவும், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் மத்திய பாஜக அரசு சொல்வதற்கெல் லாம் அதிமுக பணிந்து வருவதாகவும் ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைமை யின் செயல்பாடுகள் சசிகலா வுக்கு ஆதரவாக இருப்பது பற்றியும் ஸ்டாலின் சுட்டிக் காட்டியதாக திமுக முக்கியத் தலைவர் ஒருவர் ‘தி இந்து’ விடம் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல்
இந்த சந்திப்புக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘‘சோனியா, ராகுல் ஆகியோரை மரியாதை நிமித்தமாக ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவர்கள் எதுவும் பேசவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து மாநில அளவிலேயே பேசி முடிவு செய்வோம்’’ என்றார்.