Monday , November 18 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஜெயலலிதாவின் பெயரில் அரசு திட்டங்கள் கூடாது – தலைமைச் செயலரிடம் ஸ்டாலின் நேரில் கடிதம்

ஜெயலலிதாவின் பெயரில் அரசு திட்டங்கள் கூடாது – தலைமைச் செயலரிடம் ஸ்டாலின் நேரில் கடிதம்

ஜெயலலிதாவின் பெயரில் அரசு திட்டங்கள் கூடாது – தலைமைச் செயலரிடம் ஸ்டாலின் நேரில் கடிதம்

“ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் பெயரில் உள்ள திட்டங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், குற்றவாளியின் படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது” என வலியுறுத்தி தலைமைச் செயலரிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) நேரில் கடிதம் அனுப்பினார்.

அக்கடிதத்தில், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீதும், அவர்களுடன் கூட்டுச் சதி செய்து சொத்துக் குவித்த என்.சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மாநில லஞ்ச ஊழல் தடுப்புத் துறையால் 4.6.1997 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, நான்கு வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டு, ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வெளிவந்த அன்றே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட இதர குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அன்றைய தினம் வகித்த முதலமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் “கூட்டுப்பிழை”யின் மூலம் விடுதலை அளிக்கப்பட்டது. இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக மாநில அரசும், திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கிரிமினல் அப்பீல் விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 14.2.2017 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அந்த தீர்ப்பிலேயே பொது ஊழியராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கூட்டுச்சதி செய்தார்கள் என்றும், அவர் முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்த்தார் என்றும், சட்டவிரோத வருமானத்தை முதலீடு செய்வதற்கு என்.சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் “முகமூடி அணியாக” செயல்பட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அதே தீர்ப்பில் “பொது ஊழியராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கொஞ்சம் கூட மன உறுத்தலின்றி மற்ற மூவருடன் சேர்ந்து மிக ஆழமான கூட்டுச்சதி செய்து வருமானத்திற்கு மீறி சொத்துக்களை வாங்கிக் குவித்தார்கள்” என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த தீர்ப்பிற்கு பிறகும், “உச்ச நீதிமன்றம் குற்றவாளி என்று உறுதி செய்தவரின்” 69-வது பிறந்த நாள் விழாவில் 69 லட்சம் மரம் நடும் திட்டத்தை அறிவித்து, அதை முதலமைச்சர் துவங்கி வைத்து, அந்த விழாவில் தலைமைச் செயலாளராகிய தாங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் பங்கேற்று இருப்பது அரசு நிர்வாகம் பற்றி வாக்களித்த மக்களுக்கு தவறான செய்தியை சொல்லியிருக்கிறது.

அதேபோல் குற்றவாளியின் படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பது, அரசு விழாக்களில் இடம் பெறச் செய்வது, அவர் பெயரில் அரசு திட்டங்களை செயல்படுத்துவது எல்லாமே பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்ற கோட்பாட்டிற்கு முற்றிலும் மாறாகவும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.

குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவரின் புகழ் பரப்பும் செயலில் அரசாங்கமே ஈடுபடுவதும், அரசு பணத்தில் திட்டங்களை அறிவித்து குற்றவாளியின் பெயரில் செயல்படுத்தி வருவதும் எதிர்கால தலைமுறையினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் மக்களாட்சியின் மாண்பின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடும். ஊழல் செய்தவர்களின் புகழை அரசாங்கமே பரப்பும் போது நாம் ஏன் தூய்மையாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசு நிர்வாகத்திலும் ஏற்பட்டு மாநிலத்தின் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து விடும் ஆபத்து உருவாகி விடும்.

குற்றவாளி பெயரில் தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களில் முக்கியமாக, அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம், அம்மா ஆரோக்கிய திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா திரையரங்கம், அம்மா காய்கறி கடை, அம்மா தங்கும் விடுதிகள், அம்மா விதைகள், அம்மா சிமெண்ட், அம்மா சிறு வணிக கடன் திட்டம், அம்மா பூங்காக்கள், அம்மா உடற்பயிற்சி நிலையம், அம்மா கைபேசி திட்டம், அம்மா குடை வழங்கும் திட்டம், அம்மா பணி பாராட்டும் திட்டம், அம்மா இலக்கிய விருது, அம்மா மாணவர் ஊக்குவிப்புத் திட்டம், அம்மா அரசுப் பணித் திட்டம், அம்மா வேலைவாய்ப்புத் திறன் மற்றும் பயிற்சித் திட்டம், அம்மா அழைப்பு மையம், அம்மா இருசக்கர வாகன திட்டம் என இன்னும் “குற்றவாளி” பெயரில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்கள் அனைத்திற்கும் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி குற்றவாளியின் படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டும். அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழிப்பிற்கு ஊக்கம் அளிக்கும் விதத்திலும், மாநில அரசு நிர்வாகம் மேம்படும் விதத்திலும், பொது ஊழியர்கள் வருங்கால தலைமுறைக்கும், இன்றைய இளைஞர்களுக்கும் முன்னுதாரணாக திகழும் விதத்தில் “குற்றவாளி”யின் புகழ் பரப்பும் செயல்களை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …