இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இறந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒரு மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். சிங்களப்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் விசைப்படகில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசித் தாக்கியுள்ளனர்.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், இனியும் இலங்கை நட்பு நாடு என்று கூறிக்கொண்டு இதையெல்லாம் இந்திய அரசு சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரை தில்லிக்கு அழைத்து, மீனவர் படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இனியும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படும் போதெல்லாம் அதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அதை கிடப்பில் போடுவதை தமிழக அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. மீனவர் பிரிட்ஜோ கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அதற்கு காரணமான இலங்கைக் கடற்படையினரை கைது செய்து ஒப்படைக்கும்படி இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும். அதை செய்யத் தவறினால் இண்டர்போல் மூலமாகவோ, இந்தியப்படைகளை அனுப்பியோ அவர்களை கைது செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
மீனவர்கள் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு ஜெயலலிதா 115 கடிதங்கள் எழுதியுள்ளார் என்பதையே சாதனையாக பேசிக் கொண்டிருக்காமல், நமது மீனவர்களை பாதுகாக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். அத்துடன் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடியும், காயமடைந்த மீனவருக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.