தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு செய்திகள் உண்மை இல்லை – ஆர்.காமராஜ்
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளதாக சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பாக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் விலையில்லா அரிசித் திட்டம் மூலம் அரிசி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பாமாயில், பருப்பு, கோதுமை ஆகியவை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து விலையில்லா பொருட்களும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
குடும்ப அட்டைதாரர்களின் விருப்பத்திற்கேற்ப கோதுமை வழங்கப்படுகிறது. கோதுமைக்கு மாற்றாக அரிசி கேட்டாலும் கொடுக்கப்படும். தேவையான தானியங்கள் இருப்பில் உள்ள நிலையில் தட்டுப்பாடு என்ற கருத்தில் எள் அளவும் உண்மையில்லை. எதிரிகள் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர்.
உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் இணைவதால் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சில திருத்தங்களை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். சில பகுதிகளில் குடும்ப அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கப்படாதது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். வரும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு உறுதியாக வழங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.